குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தார். இதையடுத்து ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலிலுள்ள 17 பேரும் “அண்ணாமலை வெளியிட்ட சொத்துக்கள் தங்களுடையது அல்ல. அண்ணாமலை கூறியதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை” என சொல்ல வேண்டியதானே.

அண்ணாமலை கூறியது ஊழல் பட்டியல் அல்ல, சொத்துப் பட்டியல். அண்ணாமலை வெளியிட்டிருக்கும் சொத்துப் பட்டியலில் தனியார் கம்பெனிகள், கல்லூரி நிறுவனங்கள் என எதுவுமே தங்களுடையதல்ல என்று தி.மு.க-வினரும் அந்த 17 பேரும் வாய் திறந்திருக்கிறார்களா? இவ்வளவு லட்சம் கோடி பணம் எவ்வாறு வந்தது. ரயில் டிக்கெட்டை வாங்குவதற்குகூட தகுதியில்லாத நபர் தான் கருணாநிதி. கருணாநிதியின் குடும்பத்துக்கு இத்தனை லட்சம் கோடி சொத்துக்கள் எப்படி வந்தது..? சினிமாவில் கருணாநிதி கதை எழுதினால் எழுதியதற்கு மட்டும்தான் காசு என ஹெச்.ராஜா கூறினார்.