ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழில் பிழையின்றி கோப்புகள் தயார் செய்யவும், அனைத்து வகையான கோப்புகளும் தூய தமிழ் நடைமுறையை பயன்படுத்தி தயார் செய்வது குறித்தும் 2 நாள்கள் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி, தர்மபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், தர்மபுரி மாவட்ட தமிழ்ச் சங்க செயலாளர் சவுந்தர பாண்டியன், வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் கவிதா மற்றும் அரசுத் துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.

பின் கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசிய போது கூறியுள்ளதாவது, தமிழர்களின் உயிர் மூச்சாக விளங்கும் தமிழ் மொழியை பேசுவது அவமானம் என கருதும் அளவிற்கு நலிந்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. மேலும் பிற மொழிகளின் மீதுள்ள மோகம் மற்றும்  நாகரீக மாற்றங்கள் ஆகியவை தமிழை இரண்டாம் மொழியாக கருதும் அளவிற்கு உள்ளாக்கியுள்ளது. எனவே தமிழ் மொழியை பாதுகாப்பது நமது கடமை. மேலும் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு தமிழை தெளிவாக பேசுவதற்கும், எழுதுவதற்கும், படிப்பதற்கும் கற்றுத்தர வேண்டும். இன்றைய சூழலில் நமது குழந்தைகளுக்கு தமிழில் உள்ள விளக்கங்களை புரிய வைக்க ஆங்கில வார்த்தைகளை சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

இதனையடுத்து அரசு அலுவலர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள் தூய தமிழில் இருப்பதை உறுதி செய்து, அதனை சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்  ஒவ்வொரு கோப்புகளையும் அமைக்க வேண்டும். இந்த பயிலரங்கத்தில் தூய தமிழ் வார்த்தைகள் குறித்த சந்தேகங்களை தெரிந்திருப்பீர்கள். அவற்றை முறையாக தங்களின் அலுவலக நடைமுறையில் பயன்படுத்தி, கோப்புகளில் முடிந்த அளவு பிறமொழிச் சொற்களைக் கலக்காது தூய தமிழில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும்  வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் உள்ள பெயர்களை தமிழில் எழுத வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.