தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் பாபநாசம் ரோட்டரி சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளி போன்றவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது. இந்த ஊர்வலத்தில் பாபநாசம் ரோட்டரி சங்கம் தலைவர் கே.எஸ்.அறிவழகன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் மண்டலம் 13 உதவி ஆளுநர் ராஜா காளிதாஸ் ஆபிதீன் பள்ளி தாளாளர் சித்தார்த்தன், சாலை பாதுகாப்பு சேர்மன் ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தை பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தொடங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பாபநாசம் வணிகர் சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், பாபநாசம் ரோட்டரி சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளி, பாபநாசம் அரிமா சங்கம் மற்றும் கிங்ஸ் அரிமா சங்கம் ஆகியவற்றின் தலைவர், பொருளாளர், இயக்குனர், செயலாளர், உறுப்பினர், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஊர்வலத்தின் போது வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது அவசியம் பற்றியும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும் பதாகைகள் ஏந்திய படி பள்ளி மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பி சென்றனர். அதனை தொடர்ந்து வாகனங்களுக்கு முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.