மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற குவாலிபையர் 1 ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின, இதில் சென்னை வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மறுநாள் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி மும்பை அணி குவாலிபையர் 2ல் விளையாட தகுதி பெற்றது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான 2வது குவாலிபையர் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அகமதாபாத்தில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டடு இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கியது..

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் துவக்க வீரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் கில் இருவரும் களமிறங்கினர். இதில் சாஹா 18 ரன்னில் அவுட் ஆனார். பின் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தனர். சாஹா அவுட் ஆன போதிலும் கில் சிறப்பாக ஆடி அரைசதமடித்தார். கில் 8 ரன்களை கடந்து தொடக்கத்திலேயே ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில் சிக்ஸர் மழைகளை பொழிந்து 49 பந்துகளில் சதமடித்தார்.. கில் 60 பந்துகளில் (10 சிக்ஸர், 7 பவுண்டரி) 129 ரன்கள் எடுத்த நிலையில் 17வது ஓவரில் அவுட் ஆனார். இந்த சீசனில் இது கில்லுக்கு 3வது சதமாகும். அதன் பின் ஹர்திக் பாண்டியா – சுதர்சன் ஜோடி சேர்ந்து ஆடினர். மேலும் சிறப்பாக ஆடிய சுதர்சன் 43 (31) ரன்கள் எடுத்து 19வது ஓவர் முடிவில் ரிட்டயர் அவுட் ஆனார். கடைசியில் ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 28 ரன்களும், ரஷீத் கான் 5 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருக்க குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 233 ரன்கள் குவித்தது.   இதனிடையே போட்டியின் போது ஜோர்டான் முழங்கை இஷான் கிஷனின் கண்ணில் பட காயத்தால் வெளியேறினார். இதனால் கிஷனுக்கு பதிலாக வினோத் சேர்க்கப்பட்டார்.

இமாலய இலக்கை நோக்கி மும்பை அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா 8 ரன்னிலும், நேஹல் வதேரா 4 ரன்னிலும் அவுட் ஆகினர். இருப்பினும் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக துவக்கம் கொடுத்தனர். இதில் திலக் வர்மா முகமது ஷமியின் 5வது ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என அதிரடியாக 24 ரன்கள் விளாசினார்..

பின் அதிரடியாக ஆடி வந்த திலக் வர்மா 14 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில், ரஷித் கானின் 6வது ஓவரில் போல்ட் ஆனார். பின் கேமரூன் கிரீன் – சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பாக ஆடி வந்தது. கிரீன் 30 ரன்கள் சேர்த்த நிலையில், அவரும் ஜோஸ்வா லிட்டில் வீசிய 12வது ஓரில் போல்டானார்.

இருப்பினும் மறுமுனையில் சூர்யகுமார் யாது அதிரடியாக விளையாடி வந்தார். இந்த நிலையில் மோஹித் சர்மாவின் 15ஆவது ஓவரில் 2வது பந்தில் சிக்ஸர் பறக்க விட்ட சூர்யகுமார் யாதவ் 3வது பந்தில் க்ளீன் போல்ட் ஆனார்.

சூர்யகுமார் 38 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 61 ரன்கள் எடுத்து வெளியேற ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் கையை விட்டுப் போய்விட்டது. தொடர்ந்து விஷ்ணு வினோத் (5 ரன்) அதே ஓவரில் அவுட் ஆனார்..

பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி நம்பிக்கையான டிம் டேவிட் 2 ரன்னில் ரஷீத் கான் சுழலில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற மும்பை ஆட்டம் அத்தோடு முடிந்து போனது. பின் வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட் ஆக மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. குஜராத் அணியில் மோகித் சர்மா சிறப்பாக பந்து வீசி 2.2 ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தினார்.. மேலும் முகமது ஷமி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி..