மும்பை இந்தியன்ஸை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் 2ல் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் அதிரடியாக சதம் விளாசினார். கில் 60 பந்துகளில் (10 சிக்ஸர், 7 பவுண்டரி) 129 ரன்களும், சுதர்சன் 43 (31) ரன்களும், ஹர்திக் பாண்டியா  28 ரன்களும் எடுக்க 20 ஓவர் முடிவில் 233 ரன்கள் குவித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.   234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 18.2 ஓவரில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2.1 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த மோகித் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையின் தோல்விக்கு வழி வகுத்தார். 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. போட்டியின் போது பீல்டிங்கில் ஜோர்டன் முழங்கை இஷான் கிஷனின் கண்ணில் பட காயத்தால் வெளியேறினார்.

இஷான் கிஷானுக்குப் பதிலாக தொடக்க வீரராக பதவி உயர்வு பெற்ற நேஹால் வதேராவை (4) முகமது ஷமி முதல் ஓவரிலேயே திருப்பி அனுப்பினார். பின்னர் மூன்றாவது ஓவரில் கேப்டன் ரோகித் சர்மாவும் (8) திரும்பினார். 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்திருந்த திலக், ஆறாவது ஓவரின் கடைசி பந்தில் ரஷித் கானால் ஆட்டமிழந்தார்.

நான்காவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் கேமரூன் கிரீன் இணைந்து 52 ரன்களுடன் மும்பை அணிக்கு திரும்ப முயன்றனர், ஆனால் 12வது ஓவரில் 20 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 30 ரன்கள் எடுத்த கிரீன், ஜோசுவா லிட்டில் மூலம் திரும்பினார்.அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் விஷ்ணு வினோத்தை (5) மோஹித் திருப்பி அனுப்பினார். டிம் டேவிட் (2) ரஷீத் கானால் ஆட்டமிழக்க, மும்பையின் பைனல் கனவு முடிந்தது.

பின் வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட் ஆக மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. குஜராத் அணியில் மோகித் சர்மா சிறப்பாக பந்து வீசி 2.2 ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தினார்.. மேலும் முகமது ஷமி மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்..

ஞாயிற்றுக்கிழமை (நாளை) நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் எதிர்கொள்கிறது.