இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்த பெண் ஊழியர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனது தாயைக் கவனித்துக்கொள்ள விடுப்பு கேட்டபோது, அவரது மேலாளர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக சமூக வலைதளத்தில் வெளியான பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Manager told: Put your mother in a medical or shelter home and come to office.
byu/Mr_Moulick inIndianWorkplace

தவறான மருந்து உட்கொண்டதால் தீவிர சிகிச்சை பெற்று வரும் தனது தாயுடன் இருக்க சில நாட்கள் விடுப்பு கேட்ட அந்தப் பெண்ணிடம், அவரது மேலாளர், “உங்கள் தாய் குணமடையவில்லை என்றால், அவரை முதியோர் இல்லத்திலோ அல்லது காப்பகத்திலோ சேர்த்துவிட்டு அலுவலகத்திற்கு வாருங்கள்” என்று கூறியதாகத் தெரிகிறது. வேலை அல்லது குடும்பம் என்ற இக்கட்டான நிலையில், தனது தாயைத் தேர்ந்தெடுத்த அந்த ஊழியர், பல ஆண்டுகள் பணியாற்றிய அந்த வங்கியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களின் இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் குறித்து இணையவாசிகள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். ஒரு மனிதரின் தனிப்பட்ட சோகத்தை மதிக்காமல், அவரை இயந்திரமாக நடத்தும் இத்தகைய மேலாளர்களின் அணுகுமுறைக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், மேலாளர்கள் இது போன்ற அறிவுறுத்தல்களை எழுத்துப்பூர்வமாக அளிக்கச் சொன்னாலே அவர்கள் பின்வாங்கிவிடுவார்கள் என்றும், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான சட்டங்கள் தேவை என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், இந்தியப் பணி கலாச்சாரத்தில் நிலவும் மன அழுத்தம் மற்றும் மனிதாபிமானமற்ற போக்குகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.