2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தற்போது அவசரம் காட்டியுள்ளார். காங்கிரஸ் தரப்பில் ஏற்கனவே பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், திமுக இன்னும் குழுவை அறிவிக்காமல் தாமதம் செய்வது சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, “தேர்தல் மிக அருகில் வந்துவிட்டது, அனைத்து 234 தொகுதிகளிலும் நாங்கள் சென்று தேர்தல் பரப்புரை செய்ய வேண்டியுள்ளது, அதற்கு அதிக நேரம் எடுக்கும்; எனவே திமுக உடனடியாக பேச்சுவார்த்தை குழுவை அமைத்து இடங்களை ஒதுக்க வேண்டும்” என்று பகிரங்கமாகக் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதல் இடங்களையும், ஆட்சியிலும் பங்கையும் காங்கிரஸ் ரகசியமாக எதிர்பார்த்து வருவதாகக் கூறப்படும் நிலையில், திமுக-வின் மெதுவான நகர்வு காங்கிரஸை டென்ஷன் ஆக்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் “கூட்டணியில் விரிசல்” என்று விமர்சித்து வரும் நிலையில், செல்வப்பெருந்தகையின் இந்த அடுத்தடுத்த வலியுறுத்தல்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.