கர்நாடக மாநிலம் பெல்தங்கடியில் கல்லூரி மாணவி ஒருவர், தான் கடத்தப்பட்டதாகக் கூறி நாடகமாடிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது, கார் ஒன்றில் வந்த முகமூடி ஆசாமிகள் தன்னை கடத்த முயன்றதாகவும், தான் தப்பித்தபோது அவர்கள் தனது புத்தகங்களை எரித்துவிட்டுச் சென்றதாகவும் அந்த மாணவி போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ மற்றும் உயர் அதிகாரிகள் அந்த மாணவியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால், போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது அப்படி எந்த காரும் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் மாணவியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், உண்மை வெளிவந்தது. கிராமப்புற கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லாமல், மங்களூர் நகரில் உள்ள பெரிய கல்லூரியில் சேர மாணவி விரும்பியுள்ளார்.
ஆனால் பெற்றோர் சம்மதிக்காததால், கடத்தல் பயத்தைக் காட்டி ஊரை மாற்றத் திட்டமிட்டு அவரே தனது புத்தகங்களை எரித்துவிட்டு இந்த நாடகத்தை ஆடியுள்ளார். மாணவி மைனர் என்பதால் போலீசார் அவருக்கு கவுன்சிலிங் வழங்கி வருகின்றனர்.
