அமெரிக்காவின் பிரபல ஐஸ்கிரீம் நிறுவனமான Ben & Jerry’s நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சமூக போராளியான பென் கோஹன்(74), அமெரிக்க காங்கிரஸின் இஸ்ரேலுக்கான ஆதரவைக் கண்டித்து செனட் கூட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டார். மேலும் பென் கோஹன்,  அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு பீரங்கிகள் மற்றும் குண்டுகள் வாங்க ரூ.1.6 லட்சம் கோடிக்கான ஒப்புதலை வழங்கியதை கடுமையாக விமர்சித்தார்.

அதாவது, வரும் 2026ஆம் ஆண்டுக்கான சுகாதாரத் துறை பட்ஜெட்டை சமர்ப்பிக்கத் தயாராக இருந்த ராபர்ட் எஃப். கெனடி ஜூனியர், கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, “RFK kills people with AIDS” என கூச்சலிட்ட குழுவினர் இடையீடு செய்தனர். அதில் பென் கோஹன், “காசாவில் குழந்தைகளை கொல்ல காங்கிரஸ் குண்டுகளை அனுப்புகிறது.

அதற்காக  அமெரிக்காவில் உள்ள வறுமைக்குழந்தைகளுக்கு பயன்படும் Medicaid திட்டத்தில் நிதியை குறைத்து செலுத்து0கிறது” எனக் கூறினார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கூட்டத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து சென்றனர்.

விடுதலையான பிறகு பேசிய பென் கோஹன், “இந்த முடிவுகள் நம் நாட்டின் மனிதநேயக் கோட்பாடுகளுக்கும், மக்கள் விருப்பங்களுக்கும் எதிரானவை. பெரும்பாலான அமெரிக்கர்கள் இதற்கெதிராக இருக்கிறார்கள். நம் நாட்டின் பெயரில் மற்றும் பணத்தில் இந்தக் கொலைகள் நடப்பதை  வெட்கக்கேடானது” எனத் தெரிவித்தார். மேலும், “இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து சிந்திக்க வேண்டிய தருணம் இது” என்றும், காசா பகுதியில் உணவு, மருந்து அனுப்ப தடைகள் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.