கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கீழ் பட்டாம்பாக்கம் பகுதியில் சென்ற போது திடீரென இன்ஜினுடன் இணைந்த கியர் ராடு டிரைவரின் கையில் பெயர்ந்து வந்ததால் பேருந்து தாறுமாறாக ஓடியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். அப்போது டிரைவர் சாதூர்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார். உடனடியாக பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர்.

இதனை தொடர்ந்து டிரைவரும், கண்டக்டர் அருகே இருந்த மெக்கானிக் கடைக்கு சென்று உடைந்த கியர் ராடை வெல்டிங் வைத்து சரி செய்த பிறகு பேருந்து கடலூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி வருவதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.