கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் லோட்டஸ் விஷன் ரிசர்ச் அண்ட் ட்ரஸ்ட் சார்பில் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பியாரி என்பவர் முதல்வராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவ மாணவிகள் கல்வி கட்டணம் செலுத்தும்போது முதல்வரும், ஊழியர் ஜாய்ஸ் நித்யா என்பவரும் ரசீது கொடுத்தனர்.

அந்த ரசீதின் மீது மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்தபோது 7 லட்சத்து 1500 ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை மாணவ மாணவிகள் கொடுக்கும் கல்வி கட்டணத்தை பியாரி, ஜாய்ஸ் நித்யா ஆகிய இருவரும் இணைந்து கல்லூரியின் வங்கி கணக்கில் செலுத்தாமல் தங்களது வங்கி கணக்கில் செலுத்தி போலியான ரசீது வழங்கி மோசடி செய்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் பியாரி, ஜாய்ஸ் நித்யா ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.