கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் வசிக்கும் ஒருவர் குடும்பத்தினருடன் வால்பாறைக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அனைத்திடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்கள் மீண்டும் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ரொட்டி கடை பகுதியில் சென்ற போது கார் சாலையோரம் இருந்த எம்.ஜி.ஆர் சிலை வளாகத்தில் தடுப்பு வேலியில் மோதியதோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பகல் முழுவதும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு இரவு ஓய்வு இல்லாமல் வாகனத்தை இயக்குகின்றனர். இதனால் தூக்க கலக்கத்தில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. எனவே நள்ளிரவு நேரத்தில் வாகனத்தை இயக்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.