தமிழகத்தில் 2022-23ம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு வரும் மார்ச் 13ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் இத்தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கல்வித்துறை சார்பாக திருப்பூரில் நடந்தது. அதில் மாவட்டத்திலுள்ள 92 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொதுத் தேர்வு பணியில் ஈடுபட இருக்கும் முதன்மை கண்காணிப்பாளர், தேர்வுக் கூட கண்காணிப்பாளர் போன்றோர் பங்கேற்றனர்.

அப்போது முதன்மை கல்வி அலுவலரான திருவளர் செல்வி பேசியதாவது, பொதுத் தேர்வுக்கு முதன்மை கண்காணிப்பாளர், தேர்வுக்கூட கண்காணிப்பாளர் போன்றோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்து முடிக்க வேண்டும். அதோடு வினாத்தாள், விடைத்தாள் வழங்கிய நேரம், தேர்வு தொடங்கிய நேரம், முடிவடையும் நேரம், தேர்வின்போது ஒரு மணி நேரத்துக்கு 1 முறை மணி அடிப்பது மற்றும் தேர்வுத்துறை கொடுத்த வழிகாட்டுதல்கள் பற்றி முன்னதாக மாணவர்களுக்கு விளக்கமாக தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

மேலும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதை காரணமாக வைத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவேண்டும். இது தொடர்பாக அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் முன்னதாகவே ஆலோசனை நடத்தி அதற்கு தகுந்தாற்போல பள்ளி செயல்படும் நேரம் மற்றும் பாட வேளை மாற்றி அமைக்கவேண்டும். தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளில் முழு பாதுகாப்பு உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர், தேர்வு கூட பொறுப்பாளர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது எனவும் அவர்களுக்கு தேர்வு காலத்தில் பணி விலக்கு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.