ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் மாசா அமினி என்ற பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். அதில் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் அந்நாட்டில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் 70 குழந்தைகள் உட்பட 500 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் 20000 அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கும் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.

மேலும் கைதானவர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 1979ல் இஸ்லாமிய புரட்சி ஆண்டு நிறைவை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக ஈரான் நாட்டின் மத தலைவரான அயதுல்லா அலி காமெனி முடிவு செய்துள்ளார். இதனால் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைதானவர்கள் உட்பட பத்தாயிரம் பேருக்கு பொதுமனிப்பு வழங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மன்னிப்பை அவர் நிபந்தனைகளுடன் வழங்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.