உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது. மேலும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி இணைந்து உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்குவதை எதிர்த்து அந்நாட்டின் தலைநகரான பெர்லினில் கடந்த சனிக்கிழமை பத்தாயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் ஆர்பாட்டக்காரர்கள் தங்களுடைய கைகளில் “பேச்சுவார்த்தை நடத்துங்கள் மோதலை அதிகரிக்க வேண்டாம்.

இது நம்முடைய போரல்ல. என்ற வாசகங்களை வைத்திருந்தனர். மேலும் “உக்ரைனுக்கு ஆய்த விநியோகம் அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். இந்த போரில் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இவை நம்மை மூன்றாம் உலகப் போருக்கு எடுத்துச் செல்லும்” என ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை அந்நாட்டின் இடதுசாரி டை லிங்கே கட்சியின் உறுப்பினரான சஹ்ரா என்பவர் ஏற்பாடு செய்துள்ளார். இதனால் தலைநகர் பெர்லினில் அமைதியை காப்பதற்கு ரஷ்ய ராணுவ பாடல்கள், ரஷ்யா மற்றும் சோவியத் கொடிகள் ஆகியவை மீதான தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு 1400 போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெர்லின் நகரமே பரபரப்பில் உள்ளது.