சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பாரதி சாலையில் “தி பரஸ்பர சகாயநிதி பெரம்பூர் லிமிடெட்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருந்தனர். அவர்கள் 2 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை வைப்பு தொகையும், சிறுசேமிப்பு திட்டத்திலும் சேர்ந்து பணம் கட்டினர். இந்நிலையில் நிதி நிறுவனத்தினர் வைப்பு தொகைக்கான வட்டியை கொடுக்காமல், பணத்தையும் திரும்பத் தராமல் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட 400 பேர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நேற்று தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டு ஏழு கணினிகள், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மூன்று மாடிகள் கொண்ட நிதி நிறுவன கட்டடத்தை பூட்டி சீல் வைத்தனர்.