கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை நகர் மண்ரோடு பகுதியில் சுஜாதா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுஜாதாவின் கணவர் ராமச்சந்திரன் உயிரிழந்தார். இந்நிலையில் உறவினரான கண்ணன் என்பவர் தன்னை தாக்கியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சுஜாதா அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து நேற்று மதியம் விசாரணை நடத்தினர்.

அப்போது திடீரென சுஜாதா காவல் நிலையத்திற்கு வெளியே வந்து தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது கண்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சுஜாதா கூறினார். இதனால் போலீசார் கண்ணன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலைக்கு முயன்றதாக சுஜாதா மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது.