கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி(23) சென்னையில் இருக்கும் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பரவலூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வினோத் பாக்கியலட்சுமி உடன் தனிமையில் இருந்துள்ளார். அதன் விளைவாக 5 மாத கர்ப்பமாக இருந்த பாக்கியலட்சுமி வினோத்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் வினோத் திருமணம் செய்ய மறுத்ததோடு, கருவை கலைத்து விடுமாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாக்கியலட்சுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வினோத்தையும், அவரது பெற்றோரையும் அழைத்து நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வினோத் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இரு வீட்டு உறவினர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆர் நகரில் இருக்கும் ஸ்ரீ வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.