சேலம் மாவட்டத்தில் உள்ள தின்னப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது ரகசிய அறை அமைத்து மூட்டை மூட்டையாக போதை பாக்குகள் உள்பட குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜா என்பவரை கைது செய்து, 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 டன் குட்கா பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் குட்கா பொருட்களை அழித்து புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஓமலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று தீவட்டிபட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் 2 டன் போதை பாக்குகள் உட்பட குட்கா பொருட்களை தீ வைத்து எரித்தனர். அதனை வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.