சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை மாரியம்மன் நகரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நுண்ணறிவு பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று ராஜ் குமாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வங்கி கணக்குகள் சேவை என குறிப்பிட்டு ஒரு குறுந்தகவல் வந்தது. வங்கியில் இருந்து தான் கேட்பதாக நினைத்து ராஜ்குமார் வங்கி கணக்கு விவரங்களை அனுப்பிய சிறிது நேரத்தில் 70 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

இதே போல புழல் புத்தகரம் ரேவதி நகரில் வசிக்கும் வழக்கறிஞரான சபரிநாதனும் வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல் நம்பி 56 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.