சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் வி.ஜி.பி அமுதம் நகரில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக ஓலை குடிசை அமைக்கப்பட்டுள்ளது. அந்த குடிசையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு 16 வாகனங்கள் தீயில் இருந்து நாசமானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஓலை குடிசைகளின் மேல் இருக்கும் ஓலை மற்றும் வைக்கோலை எடுத்து ஒரு இருசக்கர வாகனத்தின் மீது போட்டு தீ வைத்துவிட்டு சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் ராமச்சந்திரன் என்பவரை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

அதாவது கடந்த தமிழ் புத்தாண்டு அன்று ராமச்சந்திரன் குடிபோதையில் படுத்து கிடந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை திருடி சென்றனர். அந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுவர்கள் தான் தனது செல்போனை எடுத்ததாக கூறி ராமச்சந்திரன் தகராறு செய்துள்ளார். அப்போது அருள் என்பவர் ராமச்சந்திரனை குடிபோதையில் தகராறு செய்யக்கூடாது எனக் கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இதனால் பழிவாங்கும் நோக்கத்தோடு ராமச்சந்திரன் அருளின் இருசக்கர வாகனத்தின் மீது ஓலை, வைகோலை போட்டு தீ வைத்தார். ஆனால் காற்றின் வேகம் காரணமாக அருகில் இருக்கும் மற்ற வாகனங்களுக்கும் தீ பரவியது தெரியவந்தது.