கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பாலக்கரை அருகே இருக்கும் ஒரு வீதியில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அந்த சாலையை மீட்டு தர வேண்டும் என தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது. நேற்று நகராட்சி ஆணையாளர் சேகர் தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர்.

அப்போது பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த விருதாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.