கடலூர் மாவட்டத்தில் உள்ள வீரபெருமாநல்லூர் புது காலணியில் வசித்த சந்துரு கடந்த 2019-ஆம் ஆண்டு வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் திருநாவலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பேருந்து மோதிய விபத்தில் சந்துரு உயிரிழந்தார். இந்நிலையில் சந்துருவின் குடும்பத்தினர் கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சந்துருவின் குடும்பத்தினருக்கு 10 லட்சத்து 15 ஆயிரத்து 650 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பிறகும் நஷ்ட தொகை வழங்கவில்லை. இதனால் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி கடந்த 2022-ஆம் ஆண்டு சந்துருவின் குடும்பத்தினருக்கு வட்டியுடன் 11 லட்சத்து 77 ஆயிரத்து 740 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். அதன்பிறகும் நஷ்ட ஈடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின் படி ஊழியர்கள் அரசு பேருந்தை ஜப்தி செய்தனர்.