கடலூர் மாவட்டத்தில் உள்ள வான்பாக்கம் சாலையில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே வீட்டுமனை நிலத்தில் உள்ள பழைய மோட்டார் கொட்டகையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது உடலுக்கு அருகே அறுந்த நிலையில் கயிறு ஒன்று கிடந்தது.

இதனால் அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.