ஒரு குழந்தை பிறந்ததும் பெற்றோர் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க பல்வேறு முதலீட்டு விருப்பங்களை தேடுகின்றனர். அந்த வரிசையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) குழந்தையில் எதிர்காலத்துக்கு சேமிக்க நீண்ட லாக்-இன் காலத்தின் அடிப்படையில் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். உங்களின் குழந்தை 18 வயதுக்கு உட்பட்டவராக இருப்பின், நீங்கள் PPF கணக்கை திறக்கலாம். இக்கணக்கு 15 வருடங்களில் முதிர்ச்சியடைகிறது. அதேநேரம் உங்கள் குழந்தைக்காக எவ்வளவு விரைவில் இந்த கணக்கை திறக்கிறீர்களோ, அது அவர்களுக்கு அவ்வளவு பயன் உள்ளதாக இருக்கும். இப்போது இதற்கு 7.1% வட்டி கிடைக்கிறது.

இதையடுத்து உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத்துக்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 10 வயது வரையுள்ள பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஏதேனும் தபால் அலுவலகம் (அ) அரசு வங்கியில் கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். 21 வருடங்களில் இந்த திட்டம் முதிர்ச்சியடைகிறது. எனினும் குழந்தைக்கு 18 வயதாகும்போது அவருடைய கல்விக்காக கணக்கில் இருந்து சில தொகையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். 21 ஆண்டுகள் முடிந்த பின்புதான் முழுத் தொகையும் கிடைக்கும். இப்போது இந்த திட்டத்தில் 8% கூட்டு வட்டியானது (காம்பவுண்டிங் இன்டிரஸ்ட்) கிடைக்கிறது.