இந்திய குடியுரிமையை கைவிட்டு வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 2,06,378 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 2 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அவர் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டில் 85,256 பேர், 2021 ஆம் ஆண்டில் 1,63,370 பேர், 2022 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 2,25,620 பேர் மற்றும் 2023 ஆம் ஆண்டில் 2,16,219 பேர் தங்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த அளவுடன் ஒப்பிடும்போது, தற்போது இந்த எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2011 முதல் 2014 வரை, சுமார் 1.2 லட்சம் பேர் மட்டுமே இந்திய குடியுரிமையை துறந்திருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் இந்த போக்கு வேகமாக உயர்ந்துள்ளது. தற்போது, உலகளவில் சுமார் 3.43 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இதில், 1.71 கோடி பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIO) ஆகவும், மற்ற 1.71 கோடி பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) ஆகவும் உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியர்களின் வெளிநாட்டு குடியுரிமை விருப்பம் அதிகரிப்பது குறித்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதம் எழுந்து வருகிறது.
