குஜராத் மாநிலம் பாலன்பூரை சேர்ந்த சபீன் ஹசன், 1995-ஆம் ஆண்டு ஒரு கூலி குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே அதிகாரி ஆகும் கனவு கொண்ட இவர், 2000-ஆம் ஆண்டு பெற்றோர் வேலை இழந்ததால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார். தாய் பிறர் வீடுகளில் சமைத்து, தந்தை செங்கல் தூக்கி, மாலையில் இருவரும் சேர்ந்து வேகவைத்த முட்டை விற்று குடும்பத்தை நடத்தினர். அதிலும், பள்ளியில் ஒரு மாவட்ட ஆட்சியர் வருகை தந்தது, சபீனின் கனவை மேலும் உறுதியானதாக்கியது.

11, 12-ஆம் வகுப்பு கட்டணம் பள்ளி நிர்வாகம் தள்ளுபடி செய்தது. பின்னர் உறவினர்களின் உதவியுடன் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். 2017-ஆம் ஆண்டு UPSC தேர்வுக்கு செல்லும் வழியில் கடுமையான விபத்தில் சிக்கிய சபீன், பல சிகிச்சைகளையும், உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு, கனவை விட்டுவிடவில்லை.

முடிவில் கடுமையான முயற்சியின் பலனாக, UPSC தேர்வில் 570-ஆம் இடம் பெற்று, 22-வது வயதில் இந்தியாவின் இளம் IPS அதிகாரியாக உயர்ந்தார். “சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், மன உறுதி மற்றும் உழைப்பால் எந்த இலக்கையும் அடையலாம்” என்பதற்கு சபீன் ஹசன் எடுத்துக்காட்டு ஆனார்.