சென்னையில் போக்குவரத்து சேவைகளை எளிமைப்படுத்துவதற்காகச் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் சென்னை ஒன் என்ற புதிய செயலி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கான பயணச் சீட்டுகளைத் தங்களது கைபேசி வழியாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
அறிமுகம் செய்யப்பட்டது முதல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தச் செயலியில் தற்போது பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநகரப் பேருந்துகளுக்கான மாதாந்திர பயண அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி மற்றும் ஒரு ரூபாய் கட்டணத்தில் மெட்ரோ மற்றும் பேருந்துகளில் ஒருமுறை சலுகை விலையில் பயணிக்கும் வசதி ஆகியவை பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
தற்போது இந்தச் செயலியைப் பயன்படுத்தும் பயணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகரப் பேருந்துகளுக்கான மாதாந்திர பயண அட்டைகளைச் செயலி வழியாகப் பெறுவோருக்கு 50 ரூபாய் வரை திரும்பப் பெறும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகையைப் பெற விரும்புவோர் சென்னை ஒன் செயலியில் பயண அட்டைக்கான பகுதியைத் தேர்வு செய்து தங்களுக்குத் தேவையான வகைப்பாட்டினைத் தேர்ந்தெடுத்த பிறகு பீம் செயலி மூலம் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும்போது ஐம்பது ரூபாய் உடனடித் தள்ளுபடியாகப் பயணிகளின் கணக்கிற்கு வந்துவிடும்.
இந்தச் சலுகையானது முதன்முறையாகச் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்தச் சலுகை அமலில் இருக்கும் என்றும் போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது.
