மதுரை மாவட்டம் திருப்பாலையிலுள்ள இம்.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இதையடுத்து ஆயிரத்துக்கும் அதிகமான மாணவியர்களுக்கு கனிமொழி பட்டங்களை வழங்கினார்.

அதன்பின் எம்பி கனிமொழி பேசியதாவது “கல்லூரி என்பது மிகப் பெரும் கனவை சுமந்து கொண்டிருக்கும் கல்விச் சாலை ஆகும். இந்த பட்டங்களை பெற எத்தனை போராட்டங்களை சந்தித்துள்ளீர்கள் என்பதனை மாணவிகள் சிந்தித்து பார்க்கவேண்டும். பெண்கள் கல்வி கற்கக் கூடாது என கடும் எதிர்ப்பு இருந்தது.

வீட்டு வேலையை பார்த்துக்கொண்டு முடங்கியிருக்க வேண்டுமென இந்த சமூகம் நினைத்தது. இதன் காரணமாக பெண்கள் எதைப் பெற வேண்டுமானாலும் போராட வேண்டியிருந்தது. இன்று அந்த நிலை இல்லை. இருப்பினும் பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமையினை இன்னும் முழுமையாக பெற்றுவிடவில்லை. மற்றவர்களை சார்ந்திருக்கும் சமூகத்தில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆகவே இதனை மாற்ற வேண்டும்” என்று அவர் பேசினார்.