நீலகிரி மாவட்டம் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள பழைய கோர்ட்டு அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால் மிகவும் பழுதானது. இதனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.37 கோடி செலவில் கோர்ட்டு வளாகம் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு சாலை மற்றும் தண்ணீர் வசதி எதுவும் ஏற்படுத்தி தரவில்லை என வக்கீல்கள் புதிய கோர்ட்டுக்கு செல்ல மறுத்து போராட்டம் நடத்தினர். எனவே இந்த பிரச்சனை குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து புகார் தெரிவித்த பின் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அடிப்படை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும் கோர்ட்டு வளாகத்தில் பெண் வக்கீல்களுக்கென்று தனி அறைகள் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென இந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டதால்,  பெண் வக்கீல்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பெண் வக்கீல்கள் நேற்று புதிய கோர்ட்டு வளாகத்தில் ஒன்றுகூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து, போராட்டம் நடத்தினர். மேலும் இது பற்றி அவர்கள் கூறியுள்ளதாவது, புதிய நீதிமன்ற வளாகத்தில் போதிய வசதிகள் இல்லை என கூறி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு, தலைமை நீதிபதியிடம் முறையிட்டதையடுத்து எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டது.  இந்நிலையில் திடீரென நேற்று இரவு அந்த அறையை பூட்டி மாவட்ட நீதிபதி சீல் வைத்துள்ளதை  கண்டித்து தலைமை நீதிபதியிடம் முறையிட உள்ளோம். மேலும் பெண் வக்கீல்களை அவ மரியாதையுடன் இழிவுப்படுத்தி மாவட்ட நீதிபதி பேசியதாகவும்  அவர்கள் கூறினார்கள்.