விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இதே பகுதியில் வாசுதேவனுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் அவர் வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நகராட்சியில் உள்ள கட்டிட பிளான் அலுவலகத்தில் அவர் வீடு கட்ட அனுமதி கேட்டு முறையாக பதிவு செய்துள்ளார். அப்போது கட்டிட அமைப்பு வரைவு ஆய்வாளர் ஜோதிமணி நேற்று முன்தினம் அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை முறையாக கட்டிய போதிலும் அவர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதை கொடுப்பதற்கு வாசுதேவனுக்கு விருப்பமில்லை. இதனால் அவர் விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாசுதேவனிடம் ரசாயனம் கலந்த பணத்தை கொடுத்து அதை அதிகாரியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி வாசுதேவன் அதிகாரியிடம் பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இதைத்தொடர்ந்து ஜோதி மணியை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.