திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவருடைய மனைவி பாண்டியம்மாள். இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இவருடைய கடைசி மகன் மருதுபாண்டி தன் மனைவியுடன்  தாய் தந்தையுடன் இருந்துள்ளார். இதில் மருதுபாண்டியின் மனைவி ஜெயலலிதாவுக்கும், மாமனார் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மருது பாண்டியின் குடும்பத்தினருக்கும் ஜெயலலிதாவின் குடும்பத்தினருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மருது பாண்டியின் குடும்பத்தினர் ஜெயலலிதாவின் தந்தை முருகேசன் மற்றும் அவருடைய சகோதரர் அருண்குமார் ஆகியோரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், அவருடைய மகன்கள் உட்பட சிலர் நள்ளிரவு நேரத்தில் மருதுபாண்டியின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

அங்கு ராசு, மருதுபாண்டி, பாண்டியம்மாள் மற்றும் அவருடைய சகோதரர் உட்பட 4 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அம்மைநாயக்கனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். மேலும் மாமியார்- மருமகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.