கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் மத்திய மந்திரி எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது, சொத்துவரி, மின்சார கட்டண உயர்வு என அதிக சுமையை மக்கள் மீது சுமத்தி உள்ளனர்.
மேலும் 24 பேர் லாக்கப் டெத்தில் மரணம் அடைந்துள்ளனர். திமுக ஆட்சியில் தான் டாஸ்மாக், மணல் கொள்ளை, பத்திரப்பதிவு ஊழல், கனிமவள கொள்ளை என கடந்த 4 ஆண்டுகளாக முழு தமிழகத்தையும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அவர்களை சுற்றியுள்ள தம்பிகளின் ஆட்சி தான் நடக்கிறது.
இவற்றிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற யாத்திரையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். அதேபோன்றுதான் முருக பக்தர்கள் மாநாடும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி தமிழக ஆன்மீக பூமி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
எங்களது கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. ஸ்டாலின் தான் தேர்தல் பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் ஜனநாயக கூட்டணியின் தலைவர் இதனை எங்களது தலைவர் அமித்ஷாவும் பலமுறை கூறியுள்ளார். அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு சாலை மேம்பாடு, ரயில் நிலையம், ஜல்ஜீவன் மற்றும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை என பல உதவிகளை வழங்கி வருகிறது.
மேலும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் செயல்பாடுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்பதை கட்சியின் தலைமைதான் தெரிவிக்கும் என கூறினார்.
