பா.ஜ.க.வின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவரும், தேசியப் பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை அவர்கள், சில நாட்களாகக் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அவரது அரசியல் எதிர்காலம் குறித்துப் பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகி வந்தார். அவர் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டது, மேலும் அவர் ‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ கூட்டத்தில் கலந்துகொள்ளாதது, புதியதாக டேரி ஃபார்ம் மற்றும் முதலீட்டு நிறுவனம் தொடங்குவதாக அறிவித்தது போன்ற காரணங்களால் அவர் பா.ஜ.க.வை விட்டு விலகுகிறாரா என்ற யூகம் எழுந்தது.
அவரது ஆதரவாளர்கள் பலர் இதனால் வருத்தம் தெரிவித்த நிலையில், “பா.ஜ.க. தலைமை மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை” என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார். இந்தச் சூழலில், கோவையில் நடந்த இயற்கை வேளாண் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர், அமைச்சர் சாமிநாதன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருடன் அண்ணாமலையும் வரவேற்றார்.
கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, அண்ணாமலை அவர்கள் கோவாவில் சமீபத்தில் நடைபெற்ற ‘அயர்ன்மேன்’ போட்டியில் தான் வெற்றிகரமாகப் பங்கேற்று முடித்ததைப் பற்றி மோடியிடம் எடுத்துக் கூறினார். இதைக் கேட்ட பிரதமர் மோடி அவர்கள், அண்ணாமலையின் தோள்களில் தட்டிக்கொடுத்து, அவரைப் பார்த்து ‘அயர்ன்மேன்’ என்று பாராட்டிக் கவுரவித்தார். இந்தச் சந்திப்பின் புகைப்படம் சமூக வலைதளங்களில் உடனடியாகப் பரவியது.
அண்ணாமலையின் ஆதரவாளர்கள் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இந்தச் சந்திப்பில் உள்ள முகபாவங்கள் மற்றும் உடல்மொழியே, அண்ணாமலை அண்ணா மீது மோடி வைத்துள்ள ஆழமான அன்பினை வெளிப்படுத்துகிறது. இவர்களின் பிணைப்பு வெறும் அரசியல் சார்ந்தது அல்ல” என்று பதிவிட்டு வருகின்றனர். மோடி கொடுத்த இந்த அங்கீகாரம், அண்ணாமலைக்கு இன்றும் பா.ஜ.க. தலைமையிடம் உள்ள செல்வாக்கையும் மவுசையும் நிரூபிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
