தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன.
குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், 81 சட்டசபைத் தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்த பாஜக, இந்த முறை அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெறத் தீர்மானித்துள்ளது.
வெற்றி வாய்ப்புள்ள 45 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப்பெற பாஜக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதிமுக தரப்பு கடந்த முறை ஒதுக்கிய 20-24 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. போன்ற கட்சிகள் கூட்டணிக்குள் வரும் பட்சத்தில் அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பாஜகவுக்கு இடங்களை ஒதுக்கலாம் என்று அதிமுக தெரிவித்துள்ளது.
இருப்பினும், 45 தொகுதிகள் வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதால், தைப்பொங்கலுக்குள் கூட்டணியை இறுதி செய்ய அதிமுக திட்டமிட்டுள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாகத் தெரிகிறது.
