மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நீக்கப்பட்ட நிலையில், இன்று (நவ.20) அடையாறில் நடைபெற்ற கட்சியின் தொடக்க விழாவில் ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை அறிவித்தார்.
இந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மல்லை சத்யா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள ஏழு நட்சத்திரங்களில் ஐந்து நட்சத்திரங்கள் திராவிட இயக்கத் தலைவர்களையும், மற்ற இரு நட்சத்திரங்கள் அகில இந்திய அளவில் டாக்டர் அம்பேத்கர் மற்றும் உலக அளவில் காரல் மார்க்ஸ் ஆகியோரையும் குறிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிக்கட்சி உருவாக அடித்தளம் அமைத்த இந்த நாளிலேயே தனது கட்சி தொடங்கப்படுவதாகவும், திராவிடர்களுக்கு சேவை செய்ய திராவிட இயக்கங்களால்தான் முடியும் என்றும் மல்லை சத்யா அப்போது குறிப்பிட்டார்.
