கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், தங்கள் குழந்தைகள் தங்களைப் போலவே இல்லை என்று சந்தேகப்படும் ஆண்கள், இப்போது அதிக அளவில் தந்தைப் பரிசோதனைக்காக (DNA Paternity Tests) டி.என்.ஏ சோதனைகளை நாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல பிரபலமான உகாண்டா பிரமுகர்கள், தங்கள் குழந்தைகளில் சிலருக்குத் தாங்கள் உயிரியல் தந்தைகள் இல்லை என்று கண்டறிந்த செய்திகள் வெளிவந்த பிறகு, இந்த டி.என்.ஏ சோதனை மோகம் அதிகரித்துள்ளது.

உகாண்டாவின் உள்துறை அமைச்சகம் நடத்தும் டி.என்.ஏ சோதனை மையத்தில், சுய விருப்பத்தின் பேரில் பரிசோதனை செய்ய வரும் ஆண்களின் எண்ணிக்கை சமீபகாலமாக பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோதனைக்கு வருபவர்களில் 95% பேர் ஆண்கள் என்ற நிலையில், அவர்களில் 98% பேருக்குமே, தங்கள் குழந்தைக்குத் தாங்கள் உயிரியல் தந்தை இல்லை என்ற அதிர்ச்சியான முடிவுகள் கிடைப்பதாக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சைமன் பீட்டர் முண்டேய் தெரிவித்துள்ளார்.

இதயம் உறுதியானவர்கள் மட்டுமே டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருமண பந்தம், சொத்துப் பங்கீடு மற்றும் விவாகரத்து போன்றவற்றின் பின்னணியிலேயே பெரும்பாலும் இந்தப் பரிசோதனைகள் கோரப்படுகின்றன.