தனது பிறந்த பேரக்குழந்தையைப் பார்ப்பதற்காக ஆறு மாத வருகை விசா பெற்று கனடா சென்ற 51 வயது இந்தியரான ஜகஜித் சிங், ஒன்ராறியோவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே இரண்டு டீனேஜ் சிறுமிகளை குற்றவியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சர்னியா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள புகைபிடிக்கும் பகுதிக்கு சிங் அடிக்கடி சென்றுள்ளார். செப்டம்பர் 8 முதல் 11 வரை சிங் இளம் பெண்களுடன் புகைப்படம் எடுக்க முயன்றது, போதைப்பொருள் சைகைகள் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், ஒரு மாணவி அவருடன் புகைப்படம் எடுத்த பிறகு, சிங் அந்தச் சிறுமிகளுக்கு இடையில் அமர்ந்து ஒருவரை நெருக்கமாக இழுக்க முயன்று, கட்டிப்பிடிக்கவும் முயற்சித்துள்ளார். சங்கடமடைந்த அந்தச் சிறுமி அவரது கையைத் தள்ளிவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினார். பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிய பிறகும் சிங் மாணவர்களைப் பின்தொடர்ந்ததாகப் பல மாணவர்கள் புகார் அளித்தனர்.

மாணவர்களின் புகார்களின் அடிப்படையில், சிங் பாலியல் தலையீடு மற்றும் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் அவர் குற்றவியல் துன்புறுத்தல் என்ற குறைந்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டா லின் லெஸ்ஸின்ஸ்கி, சிங்கின் நடத்தையை “ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் கவலையளிக்கும்” என்று குறிப்பிட்டு, அவருக்கு நாடுகடத்தல் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், அவர் மீண்டும் கனடாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டதுடன், கடுமையான நன்னடத்தைப் பிரிவுகளும் விதிக்கப்பட்டன. மூன்று வருட தகுதிகாண் உத்தரவின் கீழ், சிங் எந்தப் பள்ளி, பூங்கா, விளையாட்டு மைதானத்தில் இருந்தும் குறைந்தது 100 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்றும், தனது புதிதாகப் பிறந்த பேரக்குழந்தையைத் தவிர, 16 வயதுக்குட்பட்ட எவருடனும் அவர் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.