கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூரில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் அன்னூரில் இருக்கும் தனியார் பத்திர எழுத்தரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன். நான் பத்திரபதிவு தொடர்பாக அன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வந்த போது இளநிலை உதவியாளரான பிரபாகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 2022-ஆம் ஆண்டு செல்போன் மூலமாக பிரபாகரன் என்னை தொடர்பு கொண்டு உடல் நலம் சரியில்லை, சாப்பாடு வாங்கி கொடுக்குமாறு கேட்டார். நான் சாப்பாடு வாங்கிக் கொண்டு அவர் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றேன். அப்போது பிரபாகரன் என்னை பாலியல் பலாத்காரம் செய்து, வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இதனையடுத்து உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் நான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து பிரபாகரனிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டேன். அதற்காக கருவை கலைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என தெரிவித்தார். ஆனால் கூறியபடி திருமணம் செய்து கொள்ளாமல் என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.