கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டியில் சிவகுமார்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையை தேவராயபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் கவனித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணவேணி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் கடையிலிருந்து கரும்புகை வெளியேறியதால் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த வேட்டி சேலைகள் எரிந்து நாசமானது.

மறுநாள் காலை சிவகுமார் கடைக்கு சென்று பார்த்தபோது எண்ணெய் பாக்கெட்டுகள், சூடம் திரி ஆகியவற்றை மர்ம நபர் யாரோ சேதப்படுத்தி தீ வைத்து சென்றது தெரியவந்தது. மேலும் அவர் கடைக்குள் ஆபாசமாக எழுதிவிட்டு சென்றார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை கைது செய்தனர். அவர் குடிபோதையில் கடைக்கு தீ வைத்தது தெரியவந்தது.