நம்மில் பலருக்கும் உணவு விஷயங்களில் சில வினோதமான பழக்கங்கள் இருக்கும். அதாவது சிறு வயதில் சிலேட் குச்சி, விபூதி போன்றவற்றை விரும்பி சாப்பிடுபவர்கள் உண்டு. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர்(25) எனும் அந்தப் பெண் அமெரிக்க டிவி சேனலில் ஒளிபரப்பாகும் “என் விசித்திரமான போதை” எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதன் பின்பாக தான் அவரது இந்த வினோத பழக்கம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.

தனது ஐந்து வயதில் இருந்தே மெத்தையை சாப்பிடுவதை பழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், முதல் முதலாக கார் சீட்டிலிருந்து பஞ்சுகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒரு நாளில் ஒரு சதுர அடி மெத்தையை உண்ணும் அளவுக்கு அதற்கு அடிமையாகி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் அதிர்ஷ்டவசமான ஜெனிபரின் இந்த பழக்கமானது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக எந்த உடல் பாதிப்புகளையும் இதுவரை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஜெனிபரின் உடல் பருமன் அதிகரித்திருப்பதால் மெத்தை சாப்பிடுவதை நிறுத்தாவிட்டால் எதிர்பாராத உடல் பிரச்சினைகளுக்கு ஆளாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.