தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுகவில் இப்போது ஏற்பட்டிருக்கக் கூடிய பிரச்சனை அறிஞர் அண்ணா அவர்களால் வந்த பிரச்சனை அல்ல. அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி அவர் விமர்சித்து, நான்கு நாள் கழித்து இவர்கள் பிரச்சினையை கிளப்புகிறார்கள். என்ன காரணம் ?

திருடு போய் நான்கு நாள் கழித்து வீட்டு நாய் குலைக்கிறது என்றால் ? அந்த நாயை வைத்துக் கொண்டு இருக்க முடியுமா ? உண்மையில் என்ன  நடந்தது என்றால் ? அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி அவர்கள் பேசிய பிறகு,  பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றைச் சொன்னார். அது என்ன என்றால் ? 2026 தேர்தலில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும். நாங்கள் B டீம் அல்ல… C டீம் அல்ல…  நாங்களே வருவோம் என்றார். அதுதான் பிரச்சனை.

2026இல் பாஜக ஆட்சிக்கு வரும். அதற்காக நான் பாடுபடுவேன் என்று அண்ணாமலை சொன்னார். அப்போது தான் எடப்பாடி பழனிச்சாமி விழித்துக் கொண்டார். அப்போ நான் மாப்பிள்ளை இல்லையா ? அதுதான் பிரச்சனை. அறிஞர் அண்ணா அவர்களை பற்றி பேசியதோ,  புரட்சித்தலைவியை பற்றி பேசியது பற்றியோ எடப்பாடி பழனிச்சாமி கவலைப்படவில்லை. எடப்பாடியை 2026 இல் முதலமைச்சராக ஆக ஏற்றுக்கொள்ள வேண்டும் பாஜக என்பதுதான் பிரச்சனை. தன்னை முன்னிலைப்படுத்தி, தான் முதல் மந்திரியாகனும் என்பது தான் அவருக்கு எப்போதுமே பிரச்சனை என தெரிவித்தார்.