சமூக வலைதளங்களில் எது, எப்போது, யாருடைய வீடியோ வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், தற்போது உயிரைப் பணயம் வைத்து உடற்பயிற்சி செய்த ஒரு இளைஞரின் வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றவர்களுக்குப் புஷ்-அப்ஸ் மற்றும் சின்-அப்ஸ் ஆகிய பயிற்சிகள் பரிச்சயமானவை.
ஆனால், இந்த வீடியோவில், ஒரு இளைஞர் இந்தப் பயிற்சிகளை ஜிம்மில் செய்யாமல், ஓடும் ரயிலின் கதவில் தொங்கிக்கொண்டு செய்கிறார். @dankvjn என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளியில், இளைஞர் ஒருவர் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் ரயிலின் கதவு கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, சின்-அப்ஸ் செய்கிறார். தனது பாதுகாப்பைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் செய்யப்படும் இந்தச் சாகசம் பார்ப்பவர்களின் நெஞ்சை உறைய வைக்கிறது.
இந்த வீடியோவுக்குப் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். “லைக்குகள் மற்றும் வியூக்களுக்கான குருட்டுப் போட்டியில் சிலர் தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தயங்குவதில்லை” என்றும், “உடலை வலுப்படுத்த இதைச் செய்யாதே, நான்கு பேரின் தோள்களை வலுப்படுத்த வழிவகுக்காதே” என்றும் சமூக வலைதளப் பயனர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
