உத்தர பிரதேசம் பாராபங்கி நகரைச் சேர்ந்த முனிஷ்ரா ராவத், வயிற்று வலி காரணமாக அங்கீகாரம் இல்லாத ஸ்ரீ தாமோதர் அவுஷதாலயா கிளினிக்கிற்கு அழைத்து வரப்பட்டார். அவரது கணவர் பதே பகதூர், வலி அதிகரித்ததால் கிளினிக் உதவியை நாடினார்.

கிளினிக் உரிமையாளர்களான ஞான பிரகாஷ் மிஸ்ரா மற்றும் விவேக் மிஸ்ரா, ராவத்துக்கு சிறுநீரக கல் இருப்பதால் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் என தெரிவித்தனர். ரூ.25 ஆயிரம் செலவு வரும் என கூறிய நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பின் ரூ.20 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த நாள், பிரகாஷ் மிஸ்ரா போதையில் இருந்தபடி, யூ-டியூப் வீடியோ பார்த்தபடி அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக ராவத்தின் வயிற்றில் உள்ள பல நரம்புகள் கத்தரிக்கப்பட்டு, பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் வலியால் துடித்த ராவத் மறுநாள் உயிரிழந்தார்.

இதுகுறித்து ராவத்தின் கணவர் பதே பகதூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததோடு, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கிளினிக் உரிமையாளர்களான பிரகாஷ் மற்றும் விவேக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயரதிகாரி அமித் சிங் பதூரியா, “சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டோம். குற்றச்சாட்டுக்குள்ளான இருவரும் தப்பியோடி விட்டனர். விரைவில் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் போலி டாக்டரின் கவனக்குறைவு மற்றும் சட்டவிரோத சிகிச்சை காரணமாக பெண் உயிரிழந்த இந்த சம்பவம், உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.