உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பயங்கர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மொராதாபாத் நகரைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி, அங்குள்ள உள்ளூர் பெண்களிடம் தனது செல்போன் எண்ணை வற்புறுத்தி கொடுத்ததோடு, அவர்களின் எண்ணையும் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், அவரைப் பிடித்து கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் அப்பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தபோது, அருகிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அங்கு பெண்களிடம் தகாத முறையில் நடந்து, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்த கிராம மக்கள் அவரை மடக்கி பிடித்து, தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், “மன்னிச்சிடுங்க” என கெஞ்சும் அந்த நபரை, கூட்டம் தாக்குவதும், சிலர் அவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும் என கூறுவதும் பதிவாகியுள்ளது. போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.