ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சாய்பாசா சதர் மருத்துவமனையில், உரிய வாகன வசதி செய்து தரப்படாததால் உயிரிழந்த தனது நான்கு மாதக் குழந்தையின் உடலை ஒரு தந்தை பிளாஸ்டிக் பையில் வைத்து பேருந்தில் எடுத்துச் சென்ற இதயமற்றச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோமுண்டி பிளாக் அருகே உள்ள பால்ஜோரி கிராமத்தைச் சேர்ந்த டிம்பா சடோம்பா என்பவர், மூச்சுத்திணறல் காரணமாகப் பாதிக்கப்பட்ட தனது குழந்தையைச் சிகிச்சைக்காக வியாழக்கிழமை மருத்துவமனையில் அனுமதித்தார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மதியம் அந்தச் சிறுவன் உயிரிழந்தார். குழந்தையின் உடலைத் தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் டிம்பா வாகனம் கேட்டபோது, பல மணிநேரம் காத்திருக்கச் சொல்லியும் இறுதிவரை எவ்வித ஏற்பாடும் செய்யப்படவில்லை.
கையில் வெறும் 100 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், 20 ரூபாய்க்கு ஒரு பிளாஸ்டிக் பையை வாங்கி அதற்குள் குழந்தையின் உடலை மறைத்து வைத்துக்கொண்டு, மற்ற பயணிகளுக்குத் தெரியாமல் பேருந்து ஏறித் தனது கிராமத்திற்கு அவர் சென்றார்.
இந்த மனிதாபிமானமற்றச் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஜார்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் இர்ஃபான் அன்சாரி இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகமோ தங்களுக்குக் கீழ் ஒரே ஒரு அமரர் ஊர்தி மட்டுமே இருப்பதாகவும், அது வேறொரு பணிக்குச் சென்றிருந்ததால் காத்திருக்குமாறு கூறியதாகவும், ஆனால் அந்த நபர் அவசரப்பட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறித் தப்பிக்க முயல்கிறது.
அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களின் நிலை இவ்வளவு மோசமாக இருப்பது குறித்துப் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசு நிர்வாகத்தின் இந்த மெத்தனப் போக்கினால் ஒரு தந்தை தனது குழந்தையின் பிணத்தைச் சுமந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது நாகரிக சமூகத்தையே தலைகுனிய வைத்துள்ளது.
