சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இற்தகா பாட்டா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் அம்ரித் பஜாஜ் என்பவர் இறகுப்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

வன்பொருள் வணிகம் செய்து வந்த இவர் நாள்தோறும் தனது நண்பர்களுடன் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் திங்கட்கிழமை அன்று விளையாட்டின் போது ஒரு பந்தை வேகமாக அடித்த அடுத்த நொடியே நிலைதடுமாறி தரையில் விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் விளையாடிக் கொண்டிருந்தபோதே சுருண்டு விழுந்து உயிரிழந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.