இங்கிலாந்தில் லாரி ஓட்டுநர் ஒருவர், ஓட்டும்போது ஆபாச வீடியோ பார்த்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 17, 2024 அன்று, லங்காஷயர் மாகாணத்தின் ஸ்கெல்மர்ஸ்டேல் நெடுஞ்சாலையில், 43 வயதான நீல் பிளாட் என்பவர் லாரி ஓட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது, தனது செல்போனில் ஆபாச வீடியோ பார்த்து மூழ்கியிருந்த அவர், சாலையில் கவனம் செலுத்தாமல், முன்னால் சென்ற ஹூண்டாய் கோனா காரை மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில், காரை ஓட்டிய டானி ஐட்சிசன் என்ற இரு குழந்தைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மனைவியுடன் போனில் பேசிக்கொண்டிருந்தபோது இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது.
விபத்து குறித்து வெளியான சிசிடிவி காட்சிகளில், பிளாட் லாரி ஓட்டும்போது தொடர்ந்து செல்போனை பார்த்து, அதில் உலாவிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. விபத்து நடந்த உடனேயே அதிர்ச்சியடைந்த அவர், தலையில் கைவைத்து வருந்துவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.
செப்டம்பர் 19 அன்று நடந்த விசாரணையில், கவனக் குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதாக பிளாட் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், விடுதலைக்குப் பின் 7 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.
