அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நூற்றுக்கணக்கான கச்சா எண்ணெய் கப்பல்கள் முடங்கியுள்ளன.
உலக அளவில் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்தப் பாதையில் பல கப்பல்கள் தீப்பற்றி எரிந்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை நாற்பத்தியெட்டு மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில் ஈரான் தற்போது புதிய அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் அந்தப் பாதையைக் கடந்து செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் சுமார் பதினெட்டு கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. இது குறித்துப் பேசிய ஈரானின் நாடாளுமன்றத் தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினர் அலாயுதீன் புருஜெர்டி இந்தக் கட்டண வசூல் ஈரானின் பலத்தையும் அதிகாரத்தையும் உலகிற்குப் பறைசாற்றும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் போர் காரணமாக அதிகரித்துள்ள அரசுச் செலவுகளைச் சமாளிக்க இந்த நிதி உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் இந்த அதிரடி அறிவிப்பு குறித்து அமெரிக்கா இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்காத நிலையில் வளைகுடாப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. சர்வதேச எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளன.
