அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட 24 காரட் தங்க நாணயத்தை வெளியிட அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் 250வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சிறப்பு நாணயம் வெளியிடப்பட உள்ளது.
இந்த நாணயத்தின் ஒரு பகுதியில் அதிபர் டிரம்ப் மேசை மீது சாய்ந்து நிற்பது போன்ற உருவமும் மறுபுறத்தில் அமெரிக்காவின் தேசியச் சின்னமான கழுகு உருவமும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தங்க நாணயம் பொதுப் பணப் பயன்பாட்டிற்கு இன்றி ஒரு நினைவுப் பொருளாக மட்டுமே மக்களின் சேகரிப்புக்காக வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் அதிபர்களின் உருவத்தை அந்நாட்டு நாணயங்களில் பொறிப்பதில்லை என்ற நீண்ட கால மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த மரபை மீறி தற்போது அதிபர் டிரம்பின் உருவத்துடன் தங்க நாணயம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருப்பது அந்நாட்டில் பெரும் அரசியல் மற்றும் சட்ட ரீதியான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இது குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். டிரம்பின் உருவம் பொறித்த இந்தத் தங்க நாணயம் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
